ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Friday, March 2, 2012

உணவு - பழந்தமிழர்களும் சைவ உணவும்.

தமிழர்கள் எங்கே வாழ்ந்தார்கள் என ஆராய்வதை விடவும், அவர்கள் ஐந்து வகையான நில அமைப்பில் பரந்து வாழ்ந்திருந்தனர் என கொள்ளலாம். ஆதியில் வேட்டை சமூகமாய் புலால் உண்பவர்களாய் இருந்தாலும், காலப் போக்கில் சமவெளி மற்றும் ஆற்றங்கரை நாகரீகமாய் தலையெடுத்த பின்னர் காய், கனி மற்றும் கிழங்குகளை தங்கள் உணவில் இணைத்துக் கொண்டதற்கான குறிப்புகளை காண முடிகிறது.
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசி, தினை, தேன், காடும் காடு சார்ந்த முல்லை நிலத்தில் சாமை, வரகு, வயலும் வயல் சார்ந்த மருத நிலத்தில் செந்நெல், வெண்நெல், கடலும் கடல் சார்ந்த பகுதியில் மீனும் முக்கியமான உணவாக இருந்திருக்கின்றன. இந்த தகவல்ளை நாம் தொல்காப்பியத்தின் வழியே அறிய முடிகிறது.
இவை தவிர கால்நடைகளில் இருந்து கிடைத்த பாலில் இருந்து வெண்கட்டி, ஏடு, தயிர், மோர், நெய், ஆகியவற்றை தயாரித்து பயன் படுத்தியதற்கான குறிப்புகளும் உள்ளன.
உணவை சமைக்க ஆரம்பித்த காலத்தில் தமிழர்களின் உணவு அவித்தல், வேகவைத்தல், வறுத்தல் என்பதாகவே இருந்தது. பிற்காலத்தில் நெய் சேர்த்து பொரித்ததாக குறிப்புகள் கூறுகிறது. இறைச்சியில் நெய் சேர்த்து மிளகு தூவி பொறித்து உண்டதாக ஒரு பாடல் கூறுகிறது.
முதன்மையான உணவாக அரிசியே இருந்திருக்கிறது. நெல்லை வேக வைத்து புழுங்கல் அரிசியாக பயன்படுத்தியதாகவும் தெரிகிறது. தொன்று தொட்டு பயிரிட்டு வந்த பாரம்பரிய நெல் வகைகள் பலவும் இன்று முற்றாக அழிந்து விட்டதை இந்த இடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். சோறுடன், குழம்பு, கூட்டு, பொறியல் என உணவை பல ருசிகளில் சமைக்கும் வழக்கம் இருந்திருக்கிறது.
உணவை இலையில் வைத்து உண்ணும் பழக்கம் ஆதியில் இருந்து இன்று வரை தொடர்வது தமிழர்களின் தனிச் சிறப்பு. தாமரை இலை, மந்தாரை இலை, வாழை இலை என பல்வேறு இலைகளை இதற்குப் பயன் படுத்தியிருக்கின்றனர். உண்வை எல்லோரும் கூடியிருந்து உண்ணும் வழக்கமும் இருந்திருக்கிறது. இதனை "சிறுஞ்சோற்று நிலை”, “பெருஞ்சோற்று நிலை” என குறிப்பிட்டிருக்கின்றனர். 
இவை தவிர கள் போன்ற மது வகைகளும் பழந்தமிழரின் வாழ்வில் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் தமிழகத்தில் பக்தி இயக்கம் எழுச்சி பெற்ற போதுதான் பிற இனக் குழுக்களின் உணவுக் கலாச்சாரம் தமிழர்களிடையே ஊடுருவி இருக்கிறது.
இதுவரை பழந்தமிழர்களின் வாழ்வியலில் உணவு எத்தகையதாக இருந்தது என்பதைப் பார்த்தோம். இனி வரும் நாட்களில் இந்த உணவு எப்படி மருந்தானது, மருந்து எப்படி உணவானது என்பதைப் பற்றி பார்ப்போம்.

உணவு - சுவையும் அதன் குணமும்!


உணவை சமைத்து உண்ண துவங்கிய பின்னரே சுவையின் முக்கியத்துவம் முன்னிறுத்தப் பட்டது. நமது முன்னோர்கள் உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு என ஆறு வகையான சுவைகளை வரையறுத்திருக்கின்றனர். இன்றும் கூட அறுசுவை உணவு என்கிற பதம் நம் புழக்கத்தில் இருந்து வருகிறது. முழுமையான சரிவிகித உணவை அறுசுவை உணவு என்பதாகவும் வலியுறுத்தினர். இன்று நம்முடைய அன்றாட உணவில் இந்த ஆறு சுவைகளும் இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். 
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி, சுவையின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகவே கருதலாம். நமது உணவில் இந்த சுவைகள் சரியான விகிதங்களில் இல்லாமலோ அல்லது ஏதேனும் ஒரு சுவை மட்டும் அதிகரிக்கும் பட்சத்தில் அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கும். குறிப்பிட்ட சுவையை முற்றிலுமாய் தவிர்த்தால் அது உடலில் குறைபாடுகளை உண்டாக்குமாம். எனவே எல்லா சுவையும் நமது உணவில் சரியான விகிதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.
இந்த சுவைகளை எப்படி சுவைப்பது?
நமது முன்னோர்கள் உணவினை சுவைக்கும் வழிமுறைகளை தெளிவாகவே சொல்லியிருக்கின்றனர். அவற்றை இந்த தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன்.
இனி இந்த சுவைகள் நமது வாழ்வில் என்னவெல்லாம் செய்கிறதென பார்ப்போம். 
சுவைகளின் விகிதங்களைப் பொறுத்து உணவை மூன்று பிரிவாக, மூன்று குணமுடைய உணவுகளாக வகைப் படுத்தி இருக்கின்றனர். அவை.. “சாத்வீக உணவு”, “ராஜோ உணவு”, “தாமச உணவு”  என்பதாகும். இவை பற்றிய அறிமுகத்தை ஏற்கனவே பழைய பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறேன். அந்த பதிவினை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். 
இந்த மூன்று வகை உணவுகளின் அடிப்படையில் மனிதர்களின் குண நலன்கள் மாறு படுகின்றன. சாத்வீக வகை உணவுகள் அமைதியான குணநலனையும், ராஜோ வகை உணவுகள் ஆர்ப்பரிப்பான குண நலனையும், தாமச வகை உணவுகள் அழிவினை உண்டாக்கும் குண நலனையும் நல்குமாம். பஞ்சபூதக் கலவையான நமது உடலின் ஐம்புலன்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தும் உணவுதான் நமது குண நலன்களையும் தீர்மானிக்கின்றன என்றால் ஆச்சர்யம்தானே!
இனிவரும் நாட்களில் இந்த மூன்று வகையான உணவு மற்றும் அதன் கூறுகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
`

உணவும், வகையும் - சாத்வீக உணவு!


மனிதன் உயிர்வாழ உணவு அவசியம். நாம் உட்கொள்ளும் உணவே நமது குணநலன்களை தீர்மானிக்கிறது. இந்த குணநலன்களே நம்முடைய எண்ணம், செயல், சிந்தனைகளை தீர்மானிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தே ஒரு சமூகத்தின் வாழ்வியலையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கிறது. 
நம் முன்னோர்கள் குண நலன்களின் அடிப்படையில் உணவை மூன்றாக பிரித்துக் கூறியிருக்கின்றனர் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அந்த வகையில் இன்று முதலாவது பிரிவான சாத்வீக உணவு பற்றி பார்ப்போம்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி நாமனைவரும் அறிந்ததே!
உணவின் தரம், சுவை, அளவு எல்லாம் மிதமான அளவில் அமைந்திருந்தால் அதனை சாத்வீகமான உணவு எனலாம். இத்தகைய உணவுகளே மனிதத் தன்மைகள் எனப்படும் அருங் குணங்களான அமைதி, அகிம்சை, வாய்மை, தவம், பக்தி, கருணை, மன்னிக்கும் பெருங்குணம், திருப்தி, கண்ணியம், திருடாமை, புறங்கூறாமை, நிதானம், எப்போதும் மகிழ்ச்சி போன்றவற்றை ஒருவருக்குள் வளர்த்தெடுக்கிறது என்கின்றனர். சாத்வீக உணவுகளை தொடர்ந்து உண்டு வந்தால்  குண நலன்கள் இயல்பாக வாய்க்குமாம்.
சித்தர்கள், யோகிகள், துறவிகள், ஆத்ம சாதகர்கள் போன்றவர்கள் இத்தகைய உணவினையே நாம் உண்ண வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
சரி, எவையெல்லாம் சாத்வீக உணவுகள், நமது முன்னோர்கள் அவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.


விலங்கில் இருந்து பெறப்படும் உணவு..


1. சுத்தமான பசும்பால்
2. சுத்தமான பசுந்தயிர்
3. பசு வெண்ணெய்
4. பசுவின் நெய்


எண்ணை வகைகள்..


5. நல்லெண்ணெய் (எள் எண்ணெய்)
6. இலுப்பை எண்ணெய்
7. தேங்காய் எண்ணெய்
8. சுத்தமான தேன்


பயிர் வகைகள்..


9. பேரீச்சங்காய்
10. பேரீச்சம்பழம்
11. பாதாம் பருப்பு
12. கொப்பரை
13. பச்சைக் கற்பூரம்
14. குங்கமப் பூ (சுத்தமானது)
15. ஜாதிக்காய்
16. ஜாதிப் பத்திரி
17. திராட்சை
18. ஏலரிசி
19. கற்கண்டு
20. வெல்லச் சர்க்கரை
21. வெல்லம்
22. சுக்கு
23. மிளகு
24. திப்பிலி
25. வெந்தயம்
26. எள்
27. உளுந்து
28. அவல்
29. பொரி
30. பச்சைப் பயறு
31. திணை
32. இஞ்சி
33. வால் மிளகு
34. வெள்ளை மிளகு
35. ஜீரகம்
36. கோதுமை
37. வாற்கோதுமை
38. பச்சை அரிசி
39. சீரகச் சம்பா
40. மிளகுச் சம்பா
41. கார் அரிசி
42. குன்றிமணிச் சம்பா


காய்கறிகள், கனிகள்..


1. வாழைப்பழம் (வாழைப்பழங்களில் பூவன் பழம் மட்டுமே அதிகம் உகந்ததாக குறிப்பிடப்படுகிறது)
2. மொந்தன் வாழைப்பழம்
3. பச்சை நாடன் வாழைப்பழம்
4. பேயன் வாழைப்பழம்
5. ரஸ்தாளி
6. செவ்வாழை
7. வெண் வாழை
8. மலைவாழை
9. நவரை வாழைப்பழம்
10. அடுக்கு வாழைப்பழம்
11. கருவாழைப்பழம்
12. கற்பூர வல்லி
13. இளநீர்
14. பன்னீர்
15. தாளம் நீர்
16. மல்லிகை நீர்
17. மாம்பழம் (மிகச் சத்துக் கொண்டது)
18. கொய்யாப்பழம்
19. ஜாதி நார்த்தைப் பழம்
20. கொழிஞ்சி நார்த்தைப் பழம்
21. கிச்சிலிப் பழம்
22. நார்த்தம் பழம்
23. நாவல் பழம்
24. பலாப்பழம்
25. முலைக்கீரை
26. மணத்தக்காளி
27. பொன்னாம் கண்ணிக் கீரை
28. கொத்தமல்லிக் கீரை
29. வெந்தயக்கீரை
30. சக்ரவர்த்திக் கீரை
31. அகத்திக்கீரை
32. அகத்திப்பூ
33. வேப்பம்பூ
34. பசு முன்னை
35. பொன் முசுட்டை
36. முசுட்டை
37. கருவேப்பிலை
38. தூதுளை இலை
39. வஜ்ரவல்லி (பிரண்டை)
40. கீரைத் தண்டு
41. வாழைத்தண்டு
42. செங்கீரைத்தண்டு
43. வெண்கீரைத் தண்டு
44. சேப்பந்தண்டு
45. சேப்பங்கிழங்கு
46. தாமரைக் கிழங்கு
47. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
48. தேங்காய்
49. அருநெல்லிக்காய்
50. நெல்லிக்காய்
51. சுண்டைக்காய்
52. சுக்கங்காய்
53. மாங்காய்
54. கரைக்காய்
55. இலந்தைக்காய் - பழம்
56. வெள்ளரிக்காய்
57. கொம்பு பாகல்
58. மிதி பாகல்
59. பலாக்காய்
60. ம்முள்ளுக் கத்தரிக்காய்
61. விளாம்பழம்
62. நார்த்தங்காய்
63. கடார நார்த்தை காய்
64. கொழிஞ்சி நார்த்தங்காய்
65. மணத்தக்காளிக் காய்
66. மலைச் சுண்டைக்காய்


இவை எல்லாம் சாத்வீக உணவுகளாகும். இந்த உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதன் மூலம் மேலே சொன்ன பண்புகள் தழைத்தோங்கும்.
ரஜோ குணம் தரும் உணவு வகைகளைப் பற்றி பார்ப்போம்.

உணவும், வகையும் - ரஜோ உணவு!

நம் முன்னோர்கள் உணவினை குண நலன்களின் அடிப்படையில் மூன்று வகையாக பிரித்துக் கூறியிருப்பதையும், அதில் முதல் வகையான சாத்வீக உணவு பற்றியும் முந்தைய பதிவுகளின் ஊடே பார்த்தோம். அந்த வகையில் இன்று இரண்டாவது வகையான ராஜோ உணவு பற்றி பார்ப்போம்.

சுறுசுறுப்பு, விறுவிறுப்பு, உடல் வலிமை, தான் என்ற திணவு, அதீதமான துணிச்சல், வீரம், காமம், பேராசை, கோபம், மனவெழுச்சிகளின் திடீர் வெளிப்பாடு, மன மாறுதல்களின் திடீர்த் தோற்றம், எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிதுடிப்பு, பரபரப்பு, எதையும் முடித்தே தீருவோம் என்ற வேகம் போன்ற குண இயல்புகள் ரஜோ வகை உணவுகளைத் தொடர்ந்து உண்டு வருவதால் ஏற்படுமாம். 

மேலும், இந்த உலகில் சாதிக்கத் துடிக்கும், வாழத் துடிக்கும், வெற்றி முரசு கொட்டத் துடிக்கும் மனிதர்கள், சமூகங்கள் எல்லாம், இக்குணத்தைப் பெற்றவர்களாக இருப்பார்களாம்.

இவை எல்லாம் சரி தான்.!, எவையெல்லாம் ரஜோ உணவுகள்?, 

நமது முன்னோர்கள் அவற்றையும் தெளிவாக வரையறுத்துக் கூறியிருக்கின்றனர்.

ரஜோ குணப் பொருள்கள்..

1. பச்சை மிளகாய்

2. ஊசி மிளகாய்
3. எலுமிச்சங்காய்
4. எலுமிச்சம்பழம்
5. புளியங்காய்
6. அத்திக்காய்
7. ஆவாரம்பூ
8. வாழைப்பூ
9. அறுகீரை
10. பறங்கி இலை
11. புதீனா
12. பார வெற்றிலை
13. மாகாளிக் கிழங்கு
14. காரக் கருணைக் கிழங்கு
15. கொட்டிக் கிழங்கு
16. கருணைக் கிழங்கு
17. தாமரைக் கிழங்கு
18. சிறு கிழங்கு
19. களிப்பாக்கு
20. கடுகு எண்ணெய்
21. வெள்ளாட்டுப்பால்
22. வெள்ளாட்டுத் தயிர்
23. வெள்ளாட்டு எண்ணெய்
24. வெள்ளாட்டு நெய்
25. ஓமம்
26. கசகசா
27. கலப்பு நெய்
28. கல்யாணப் பூசணிக்காய்
29. கோடைப் பூசணி
30. பன்றிப் புடலங்காய்
31. வெண்டைக்காய்
32. புடலங்காய்
33. கருஞ்சீரகம்
34. காட்டு சீரகம்
35. பிறப்பு சீரகம்
36. லவங்கம்
37. லவங்கப்பட்டை
38. அப்பளாக் காரம்
39. வீட்டு உப்பு
40. புளி
41. மிளகாய்
42. நாய்க்கடுகு
43. செங்கடுகு
44. சிறு கடுகு
45. வெண்கடுகு
46. தனியா
47. கஸ்தூரி மஞ்சள்
48. கஸ்தூரி
49. மஞ்சள்
50. முந்திரிப்பருப்பு
51. மணிலா
52. ஜவ்வரசி
53. துவரம்பருப்பு
54. அன்னாசி
55. மாதுளை
56. கொமட்டி மாதுளை

57. நாக்கில் பட்டால் விறுவிறுவென்று எரிச்சல் தரும் பொருள்கள் எல்லாம் இவ்வகையில் சேரும்.


இப்பொருள்கள் எல்லாம் விறுவிறு, சுறுசுறு குணம் கொண்டவை. உலக வாழ்வில் உள்ளவர்களை, உணர்ச்சிகளத் தூண்டி ஆட்டிப்படைக்கும் குணம் கொண்டவை இவை.

தாமச குணம் தரும் உணவு வகைகளைப் பற்றி



உணவும், வகையும் - தாமச உணவு!

ஒருவர் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளே அவரின் குண நலன்களை தீர்மானிக்கிறது என்ற நமது முன்னோர்களின் தெளிவுகளை பார்த்து வருகிறோம். மூன்று வகையான உணவுகள் மூன்று விதமான குண நலன்களுக்கு காரணமாய் இருக்கிறது என்பதையும், முதல் இரண்டு வகை உணவுகள் பற்றி இதுவரை பார்த்திருக்கிறோம்.அந்த வகையில் இன்று தாமச குணத்தை தரும் உணவு வகை பற்றி பார்ப்போம்.

முதலில் தாமச குணம் என்றால் என்ன?, அது எத்தகையது என்பதை பார்த்துவிடுவோம்.

மிதமிஞ்சிய கோபம், அளவு கடந்த காமம், அதிக தூக்கம், மூர்க்கமான முட்டாள்தனம், நிலைத்த மனமின்மை போன்றவற்றையே தாமச குணம் என்கிறார்கள்.

இத்தகைய குண நலன்களை உடையவர்கள் முரடர்களாகவும், எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் முன்கோபிகளாகவும், சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் திறமின்றி சூழ்நிலை மற்றும் உணர்வுகளுக்கு அடிமையாகி குற்றங்களைச் செய்பவர்களாக இருப்பார்களாம்.

இப்படியான குணத்தை ஒருவருக்கு, அவர் உட்கொள்ளும் உணவுகள்தான் கொண்டு தருகின்றன என்பதை தற்போதை நவீன அறிவியலும் ஆய்வுகளுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இம் மூன்று வகை உணவுகளின் பட்டியலைக் கொண்டு, இதுநாள் வரை நாம் எத்தகைய உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம், நமது குணநலன்கள் எத்தகையதாக இருக்கிறது என்பதை சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம்.

தாமச குணத்தை தரும் உணவுப் பொருட்கள்..

1. வெங்காயம்

2. வெள்ளைப் பூண்டு
3. முருங்கைக் கீரை
4. பசலைக் கீரை
5. கலவைக் கீரை
6. ஆரைக் கீரை
7. சிறு கீரை
8. உருளைக் கிழங்கு
9. பெருவல்லிக் கிழங்கு
10. முள்ளங்கி
11. சிறுவள்ளிக் கிழங்கு
12. மரவள்ளிக் கிழங்கு
13. முருங்கைக் காய்
14. பீர்க்கை
15. வாளவரைக்காய்
16. மொச்சை
17. சுரைக்காய்
18. அவரை
19. கொள்
20. செஞ்சோளம்
21. கருஞ்சோளம்
22. பட்டாணி
23. தட்டைப்பயறு
24. கம்பு
25. வரகு
26. கேழ்வரகு
27. புழுங்கல் அரிசி
28. கத்திரிக்காய்
29. முருங்கைப்பூ
30. ஈச்ச வெள்ளம்
31. பனைவெல்லம்
32. பனங்கற்கண்டு
33. கள் வகைகள்
34. நுங்கு
35. விளக்கெண்ணெய்
36. பருப்புக் கீரை
37. புளிச்சக்கீரை
38. காசினிக்கீரை
39. பனம்பழம்
40. சீதாப்பழம்
41. பண்ணைக் கீரை
42. முந்திரிப்பழம்
43. எருமைப்பால்
44. எருமை தயிர்
45. எருமை வெண்ணெய்
46. எருமை நெய்

இது வரை பழந் தமிழரின் வாழ்வில் உணவு என்பது எத்தகையதாக இருந்தது. உணவின் வகைப்பாடுகள்,அதனால் ஏற்பட்ட வாழ்வியல் கூறுகள் போன்றவற்றைப் பார்த்தோம். 

இனி வரும் நாட்களில் இந்த உணவினை எவ்வாறு உட் கொள்ள வேண்டும். அதனால் நமக்கு உண்டாகும் சாதக பாதகங்கள் குறித்த சித்தர் பெருமக்க்ளின் தெளிவுகளைப் பார்க்க இருக்கிறோம்.

உணவு - எத்தனை சாப்பாடு?, எப்போது சாப்பிடுவது?


பழந்தமிழரும், உணவும் என்கிற இந்த நெடுந்தொடரில் இதுவரையில் உணவின் வரலாறு, தன்மை, சுவை, குணநலன்கள் அவை மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவைகளைப் பார்த்தோம். உணவை எப்படி உட்கொள்வது, எந்த சமயத்தில் உட்கொள்வது, எந்த வகையான உணவுகளை உட்கொள்வது, உணவையே மருந்தாகவும், மருந்தையே உணவாகவும் கொள்ளுதல் என பல பரிமாணங்களை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர்.

அன்னிய மொழி மற்றும் இனத்தாரின் பாதிப்புகள் நமது வாழ்வில் ஊடுறுவும் வரையில் இந்த வாழ்வியல் நியதிகளை நமது முன்னோர்கள் தீவிரமாய் கடைபிடித்தே வந்தனர். 
தற்போதைய உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் நமது வேர்களை நாம் மறந்து போய்விட்டோம் என்பது வருந்தத்தக்கது. அந்த வகையில் மறைந்து போன சில நியதிகளை இனிவரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் ஒரு நாளைக்கு எத்தனை தடவை உணவை உட்கொள்ளுதல் வேண்டும், எந்த சமயத்தில் உட்கொள்ள வேண்டும் என்கிற தகவலை இன்று பார்ப்போம்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு போதுமானது என்கிறார் தேரையர். தனது "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் இதனை பின் வருமாறு விளக்குகிறார்.

தன்மமி ரண்டேயூண் டப்பிமுக்காற் கொள்ளினினன்
சின்மதலை காளைகடல் சேர்பருவ-தன்மூகுர்த்த
மொன்றுக்கு ணானகுக்கு ளோதுமிரண் டுக்குளுண்பர்
நன்றுக்குத் தீயோர் நயந்து

ஒரு நாளில் இரண்டு வேளைகள் உண்பதே நன்மையளிக்கும். அதற்குமேல் மூன்றாவது காலம் உணவு உண்ன வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாளின் முதலாவது உணவை சூரிய உதய நேரத்திலிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும், இரண்டாவது உணவை சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள்ளும், மூன்றாவது உணவை சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்குள்ள்ம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த கால முறாஇ தவறி உண்டால் உடலுக்கு தீமை உண்டாகும் என்கிறார்.

என்ன தீமை விளையும்?

மூன்றுநான் காறெண்மு கூர்த்தங் களின்முறையே
ஞான்றுளுண்ணு மந்த நறுமுணவே-தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோகமுயிர்க் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்.

சூரியன் உதய நேரத்திலிருந்து நான்கு மணி நேரதில் உண்ணும் உணவினால் உடலுக்கு மிதமான நோய் ஏற்படுமாம். சூரியன் உதய நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் உண்ணும் உணவினால் நோய்கள் உண்டாகுமாம்,  மாலையில் சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் உண்ணும் உணவினால் உயிருக்கு தீங்கு விளையும் என்கிறார்.
தேரையரின் இந்த தெளிவுகளுக்கு பின்னே இருக்கும் அறிவியல் தன்மைகள் ஆய்வுக்குறியவை. எனினும் நமது முன்னோர்கள் இதனை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழ்ந்திருந்தனர் என்பது மட்டும் உண்மை.
 எப்படி உணவை சாப்பிடுவது என்பது பற்றி பார்ப்போம்.


உணவு - எப்படி சாப்பிடுவது? எவ்வளவு சாப்பிடுவது?


நமது முன்னோர்கள் சுவையினை இனிப்பு, புளிப்பு, உறைப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு என ஆறாக பிரித்து கூறியிருப்பதை முன்னரே பார்த்தோம். இத்தகைய சுவையுடைய உணவுப் பொருட்களை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு உடலுக்குத் தேவையான தாதுக்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த சுவைகளை நமது நாக்கு உணரும் போது நமது குடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப் பட்டு ஜீரணமாகத் தேவையான நீர்மங்கள் சுரக்கிறது.

நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியவாழ்வு வாழ முடியும் என்கிறார் தேரையர். மேலும் இந்த உணவுகளை எந்த வரிசையில் உட்கொள்வது பற்றியும் தனது "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.

ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ ருப்பொடுசா

காதி யுரைப்பப்பா லந்தத்திற்-கோதிறுவர்ப்

பாந்ததியுப் பூறியகா யாதிவகை சேருணவை

மாந்ததிக கத்தையுறு வாய்.

முதலில் இனிப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து புளிப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும்,  அடுத்து நீருப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து கீரை முதலானவைகளுடன் காரச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், உட்கொண்டு முடிவில் துவர்ப்பு, தயிர், ஊறுகாய், என்ற வரிசையில் உணவை உட்கொண்டால் எப்போதும் சுகத்தையே கொடுக்கும் என்கிறார்.

சரி இந்த உணவுகளை எவ்வளவு எடுத்துக் கொள்வதாம்?, அதனையும் தேரையர் வரையறுத்துக் கூறியிருக்கிறார்.

முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு முழுவுணலி

லக்கா ரணமன்ன சாகாதிகூடி யரையதிற்பால்

சிக்கா வமுதம்பு தக்கிரங் காலுண்டிச் சேடம்வெளி

வைக்கா விடிலுண்டி வேகா தனலும் வளியுமின்றே

சிறியவர், பெரியவர், ஆரோக்கியமானவர், நோயாளி என பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால் வயிறு அளவுக்கே உணவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு, பலாகாரம் போன்ற பதார்த்தங்கள் அரை வயிறும், பால், மோர், நீர் போன்றவை கால்வயிறு அளவுக்கு எடுத்துக் கொள்ளக் கூறுகிறார். 

ஒரு போதும் முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். அப்படி முழு வயிறு உணவு உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச் சீரணிக்கத் தக்க அக்கினியும் வாயுவும் சஞ்சரிப்பதற்கு இடமிருக்காது போய்விடும் என்கிறார்.
நன்றி சித்தர்கள் இராச்சியம்





No comments:

Post a Comment