திருவாசகத்துக்கு ஒரு தனிபெருஞ் சிறப்பு உண்டு. அது திருவாசகப்பாடல்கள், உருகி உருகிப் பாட பெற்றமையால், படிப்போரையும் கேட்போரையும் மனம் உருகச் செய்யும் என்பது. மன உருக்கம் பிறர் செய்த உதவிகளை நினைத்த போதும், பிறரது பெருமையை எண்ணிய போதும் உண்டாவது. திருவாசகம் இறைவனது பெருமையினையும், அவன் காட்டிய கருணையினையும் நினைந்து நினைந்து பாடியது.
அந்நிலையினை எண்ணிப் படிப்போர்க்கும் ஏன் அந்நிலை வாராது? திருவாசகத்துக்கு உருகாதோர் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது மூத்தோர் வாக்கு.
திருவாசகத்தில் உள்ள ஒரு பதிகம் பண்டாய நான்மறை. திருப்பெருந்துறையில் அருளியது பாடலும் விளக்கமும் பின்வருமாறு.
பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங்
கண்டாரு மில்லை கடையேனைத் தொண்டாகக்
கொண்டருளுங் கோகழிஎங் கோமாற்கு நெஞ்சமே
உண்டாமோ கைம்மா றுரை. 1
அறம், பொருள், இன்பம், வீடு என்ற உயர்ந்த பழம்பெரும் நால்வேதங்களாலும் கூட இறைவனின் சொரூப நிலையைக் காண முடியாது. திருமாலும் நான்முகனும் கூட அவனைப் பார்த்ததில்லை. கீழ்ப்பட்டவனாகிய என்னையும் அடிமையாக திருப்பெருந்துறையுள் ஏற்றுக் கொண்டருளிய அரசன் (சிவன்) அவனுக்கு, நான் செய்யும் பதில் உதவியும் உண்டோ?. மனமே சொல்?
உள்ள மலமூன்றும்மாய உகுபெருந்தேன்
வெள்ளந் தரும்பரியின் மேல்வந்த - வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள் வாழ்த்தக்
கருவுங் கெடும்பிறவிக் காடு. 2
உயிர்களிடத்தே உள்ள இருள், இருவினை மற்றும் மாயை என்கிற மும்மலமும் நீங்கியொழிய, குதிரையின் மேல் ஏறிவந்த வள்ளலாகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பெருந்துறையை வாழ்த்துங்கள் உலகத்தவரே. வாழ்த்தினால், பிறவியாகிய இக்காடானது வேரொடு அழியும்.
காட்டகத்து வேடன் கடலில் வலைவாணன்
நாட்டிற் பரிபாகன் நம்வினையை - வீட்டி
அருளும் பெருந்துறையான் அங்கமல பாதம்
மருளுங் கெடநெஞ்சே வாழ்த்து. 3
அன்பர்களுக்கு அருட் செய்யும் பொருட்டு, அருச்சுனனுக்காக காட்டினில் வேடனாய் வந்த திருக்கோலமும், கடலில் வலை வீசின திருக்கோலமும், நரியை குதிரையாக்கியபோது குதிரைச் சேவகனாய் வந்த திருக்கோலமும் பூண்டு, நம்முடைய வினைகளை கெடுத்து அருள் புரிகின்ற திருப்பெருந்துறையுடைய பெருமானது தாமரை மலர் போன்ற திருவடிகளை நமது அறியாமை நீங்கும்படியாக நெஞ்சே வாழ்த்துவாயாக.
வாழ்ந்தார்கள் ஆவாரும் வல்வினையை மாய்ப்பாருந்
தாழ்ந்துலகம் ஏத்தத் தகுவாருஞ் சூழ்ந்தமரர்
சென்றிறைஞ்சி ஏத்தும் திருவார் பெருந்துறையை
நன்றிறைஞ்சி ஏத்தும் நமர். 4
வாழ்ந்தவர்களாவாரும் வலிய வினைகளைக் கெடுப்பவரும் உலகம் வணங்கி துதித்தற்குரியாரும் யாவெரெனில் தேவர்கள் சூழ்ந்து போய் வணங்கி துதிக்கின்ற அழகு நிறைந்த திருப்பெருந்துறையென்னும் திருப்பதியை நன்றாக வணங்கித் துதிக்கின்ற நம்மவராகிய அன்பரேயாவர்.
நண்ணிப் பெருந்துறையை நம்மிடர்கள் போயகல
எண்ணி எழுகோ கழிக்கரசைப்-பண்ணின்
மொழியாளோ டுத்தர கோசமங்கை மன்னிக்
கழியா திருந்தவனைக் காண். 5
நம் துன்பங்கள் நீங்கிப் போகும் வழியை ஆராய்ந்து திருப்பெருந்துறைக்குத் தலைவனும், பண் போன்ற மொழிகளையுடைய உமையம்மையோடு திருவுத்தரகோசமங்கையில் நிலைபெற்று நீங்காதிருந்தவனும் ஆகிய இறைவனை திருப்பெருந்துறையை அடைந்து நெஞ்சே காண்பாயாக.
காணுங் கரணங்கள் எல்லாம்பே ரின்பமெனப்
பேணும் அடியார் பிறப்பகலக் காணும்
பெரியானை நெஞ்சே பெருந்துறையில் என்றும்
பிரியானை வாயாரப் பேசு. 6
அறிகின்ற கருவிகள் எல்லாம், பேரானந்தத்தையே நுகர்வனவாகும்படி தன்னை விரும்புகின்ற அடியார்களது, பிறவி நீங்கும்படியாக அருளுகின்ற பெரியோனும், திருப்பெருந்துறையில், எந்நாளும் நீங்காதவனும் ஆகிய சிவபெருமானை நெஞ்சே நீ வாயார வாழ்த்துவாயாக.
பேசும் பொருளுக் கிலக்கிதமாம் பேச்சிறந்த
மாசில் மணியின் மணிவார்த்தை பேசிப்
பெருந்துறையே என்று பிறப்பறுத்தேன் நல்ல
மருந்தினடி என்மனத்தே வைத்து. 7
உயர்த்திச் சொல்லப்படும் பொருள்களுக்கெல்லாம் இருப்பிடமாய் உள்ள, சொல்லின் அளவைக் கடந்த குற்றமற்ற மாணிக்கம் போன்ற இறைவனது அழகிய புகழ் மொழிகளை உரைத்து திருப்பெருந்துறையே என்று போற்றி நன்மையைத்தரும் மருந்து போன்ற அவனது திருவடியை என்னுடைய மனத்தில் அமைத்து பிறவியாகிய பிணியை நீக்கிக் கொண்டேன்.
திருச்சிற்றம்பலம்.
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி !!

No comments:
Post a Comment