மகாபலி சக்கரவர்த்தியை ஆட்கொள்ள மகாவிஷ்ணு, வாமனராக அவதாரம் எடுத்த நன்னாள் திருவோணம். இது ஆவணி மாத அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி, 10 நாட்கள் கொண்டாடப்படும். இந்நாளில் குறிப்பிட்ட சில பெருமாள் கோயில்களில் சுவாமி சன்னதி முன்பு, திருவோண தீபம் ஏற்றுவர். கேரளத்தில் இந்த விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா கொண்டாடும் வேளையில் பக்தர்கள் வீட்டு வாசலில் அத்தப்பூ கோலம் வரைவர். விதவிதமான பாயசங்கள் செய்து பெருமாளுக்கு படைப்பர். இந்நாளில் குழந்தைகள், பெண்கள் ஓண ஊஞ்சலில் ஆடி மகிழ்வர்.
பலன்: இந்த விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு பணிவு குணம் வளரும். குடும்பத்தில் செல்வம் கொழிக்கும்.
ஓணம் வந்நல்லோ: கேரள மக்களின் மிகப்பெரிய பண்டிகை ஓணம். ஆவணி மாதம் அஸ்தநட்சத்திரம் தொடங்கி பத்துநாட்கள் கொண்டாடப்படும். பெருமாள் வாமன அவதாரம் எடுத்து மகாபலி மன்னனை ஆட்கொண்டதை நினைவு படுத்தும் வகையில் இவ்விழா நடக்கிறது. ஒரு காலத்தில் இதை அறுவடைத் திருநாளாக கொண்டாடினர். தமிழில் முதல் மாதமான சித்திரை போல, சிங்கம்(ஆவணி) மாதமே மலையாளத்தில் முதல் மாதமாக உள்ளது. இதனால், இதை புத்தாண்டு விழாவாகவும் கொண்டாடுகின்றனர். சங்ககாலத்தில் இருந்தே இவ்விழா நடந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. தமிழகத்தில் மதுரையில் இவ்விழா கொண்டாடப்பட்டதாகவும், அந்நாளில் யானைச்சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல் உண்டு. 8ம் நூற்றாண்டில் மன்னராக இருந்த குலசேகர ஆழ்வார் காலத்தில் இப்பண்டிகை கொண்டாடப்பட்டதையும் அறியமுடிகிறது. இவ்விழாவின் போது ஓணக்கொடி என்னும் புத்தாடையை ஒருவருக்கொருவர் கொடுத்து மகிழ்வது சிறப்பான அம்சம்.
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ: ஓணம் பண்டிகையில் பூக்கோலம் மிகவும் பிரசித்தம். தும்பை, காக்கப்பூ, தேச்சிப்பூ, முக்குட்டி, செம்பருத்தி, கொங்கினிப்பூ, அனுமன் கிரீடம், சேதிப்பூ ஆகியவற்றால் கோலத்தை அலங்கரிப்பர். நறுமணம் கமழும் பூக்களைப் போல, உள்ளத்திலும் இல்லத்திலும் பக்திமணம் கமழ வேண்டும் என்பதே பூக்கோலத்தின் நோக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் பூக்கோலம் கலையுணர்வை வெளிப்படுத்தும். தும்பைப்பூவிற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இது அளவில் மிகச் சிறியதாக இருக்கும். இது சிவனுக்கு உரியது. இதுமட்டுமின்றி, இங்குள்ள வீடுகளில் ஊஞ்சல் கட்டி இளம்பெண்கள் விளையாடி மகிழ்வர்.
பவனி வரும் யானைப்பட்டாளம்: தெருவில் ஒரு யானை வந்தாலே குழந்தைகள் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிப்பர். கேரளாவில் ஓணத்திருவிழாவில் யானைப்பட்டாளத்தையே கண்டு ரசிக்கலாம். அவற்றின் நெற்றியை தங்கத்தட்டினால் ஆன முகப்படாம் அழகு செய்யும். பாரம்பரியம் மிக்க பட்டாடைகள், ஒயிட் மெட்டல் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட குடைகள் வைக்கப்படும். பட்டுக்கயிறு, பிரத்யேக அணிகலன்கள், உடலில் வரையப்பட்டிருக்கும் டிசைன் என்று யானைகள் அணி வகுத்துச் செல்வது தனியழகு. இங்கு நடக்கும் மரத்தொழிலுக்கு யானைகள் மிகவும் உதவுகின்றன. மேலும், இவை விநாயகரின் அம்சம் என்பதால் தெய்வீகமானவை. எனவே, அவற்றிற்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் ஊர்வலம் நடத்துகின்றனர்.
பெருமாளுக்கு திருக்குறளின் பெயர்: குரு÷க்ஷத்ர யுத்தத்தில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்து போனது. அதனைத் தோள் கொடுத்து நிறுத்தும் முயற்சியில் அவன் ஈடுபட்டான். இது தான் சந்தர்ப்பம் என அவன் மீது அர்ஜூனன் அம்பு தொடுத்து கொன்றான். பின்னாளில், யுத்த தர்மத்தைப் பின்பற்றாமல் கர்ணனைக் கொன்றதை எண்ணி மனம் வருந்தினான். பாவ நிவர்த்திக்காக மலைநாடு வந்தான். ஆரன்முளா என்ற திவ்யதேசத்தில், தன் ஆயுதங்களை வன்னிமரம் ஒன்றில் ஒளித்து வைத்தான். அதன் அருகில் அமர்ந்து மகாவிஷ்ணுவை நினைத்து தியானத்தில் ஆழ்ந்தான். திருமாலும் பார்த்தசாரதியாக காட்சியளித்து அருள்புரிந்தார். இத்தலம் செங்கண்ணூரில் இருந்து 10கி.மீ., தொலைவில் உள்ளது. இத்தலத்தில், திருமால் வாமனமூர்த்தியாக அருள்புரிகிறார். இவருக்கு திருக்குறளப்பன் என்று பெயர். குறள் என்றால் குறுகியது என்று பொருள்.
இவர் சரியான ஜாம்பவான்: அவர் பெரிய ஜாம்பவான்! அவருக்கு தெரியாத விஷயமே கிடையாது என்று சிலரைச் சொல்வார்கள். விபரமான நபர்களை இவ்வாறு சொல்வது வழக்கம். வாமன அவதாரம், ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகிய மூன்று அவதார காலத்திலும் வாழ்ந்தவர் ஜாம்பவான். கரடி முகம் கொண்டவர். பெருமாள் வாமன அவதாரத்துடன் வந்து திரிவிக்ரமனாக உலகளந்து நின்ற போது, அவரை வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர். அசுரனையும் ஆட்கொண்டு அருளிய வாமனரின் பெருமையை எண்ணி, ஜாம்பவான் பறை முழக்கி வலம் வந்து வணங்கினார்.
வாமனருக்கு நெய்தீபம்: குரு பார்க்க கோடி நன்மை என்கிறது ஜோதிட சாஸ்திரம். எந்த கிரகத்தைக் குருபார்த்தாலும் அந்த கிரகம் சுபபலன்களைத் தந்துவிடும். நவக்கிரகங்களில் பூரணசுபகிரகம் குரு. அந்த குருவின் அம்சமாகத் திகழ்பவர் வாமனர். வியாழ திசை, வியாழ புத்தி நடப்பில் உள்ளவர்கள், குருதோஷத்தால் திருமணம், புத்திரப்பேறு தடைபடுபவர்கள் வியாழக்கிழமைகளில் வாமனமூர்த்தியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெறலாம். வாமனமூர்த்திக்கு வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு. வாமனருக்குரிய கோயில் கேரள மாநிலம் திருக்காக்கரையில் உள்ளது. வாமனரை மனதில் எண்ணி மற்ற பெருமாள் கோயில்களிலும், திருவிளக்கின் முன்னும் கூட தீபம் ஏற்றலாம்.
மனத்தில் தூய தமிழ் சொற்கள்: காக்ராவில் பெருமாள் தெற்குநோக்கி நின்ற கோலத்தில் அருள் புரிகிறார். இத்தல இறைவன் மீது நம்மாழ்வார் திருவாய்மொழியில் பதினொரு பாடல் களைப் பாடியுள்ளார். வளம் நிறைந்த சோலைகளால் சூழப் பட்ட திருகாக்கரையில் இருக்கும் எம்பெருமான் தன் இனிய குணத்தால் என் உள்ளத்தில் இடம்பிடித்தான். உயிராய் நின்றவன், என் உயிரையும் குடித்துவிட்டான். வஞ்சம் நிறைந்த அக்கள்வனின் மாயத்தை நான் அறியவில்லையே! என்று நயத்தோடு பாடுகிறார். ஆழ்வாரின் கூற்றுப் படி இன்றும் கோயில் பசுஞ் சோலை சூழ்ந்ததாகவே அமைந்துள்ளது. கபிலமுனிவர் காக்ராவில் தவம் செய்து, வாமனமூர்த்தியின் தரிசனம் பெற்றார். பெருமாளும், தாயாரும் தூயதமிழ்ச் சொற்களாக அப்பன் என்றும் பெருஞ்செல்வ நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஓணம் பிரார்த்தனைப் பாடல்
பாடல் - 1:
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்
பொருள்: விஸ்வரூபம் எடுத்து உலகை அளந்த திருமாலின் பெருமையைப் பாடியபடி பாவைநோன்பு நோற்று நீராடினால், நாட்டில் மாதம் மும்மாரி மழை பொழியும். செந்நெல் விளைந்து வளம் பெருகும். கயல்மீன்கள் வயலில் மகிழ்ந்து விளையாடும். குவளைமலரில் தேனை உண்ட வண்டுகள் தூங்கி மகிழும். வளமான பசுக்கள் வள்ளலைப் போல, பால் பொழிந்து குடங்களை நிரப்பும். எங்கும் செல்வ வளம் நிறைந்து நாட்டில் சுபிட்சம் தங்கும்.
பாடல் - 2
அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடி செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
பொருள்: அணிகலன்களும், ஆடையும், குடிக்க தண்ணீரும், உண்ணும் சோறும் வழங்கி தர்மம் காக்கும் எங்கள் பெருமானே! நந்தகோபாலா! எழுந்திருப்பாயாக. கொடி போன்ற பெண்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கும் குலவிளக்கே! யசோதையே எழுந்திருப்பாயாக. வானவெளியில் உட்புகுந்து காலால் உலகத்தையும் அளந்து நின்ற தேவர்களின் தலைவனே! உறங்காது எழுந்திருப்பாயாக. செம் பொன்னால் ஆன வீரக்கழல் அணிந்த பாதங்களை உடைய பலதேவா! நீயும் உன் தம்பியும் எழுந்திருப்பீராக.

No comments:
Post a Comment