ஏகாத்மதா ஸ்தோத்திரம்

இந்து அனைவரும் சோதரரே, இந்து எவருமே தாழ்ந்தவராகார்,இந்துவை காப்பது என்விரதம்,சரிசமானமே எனது மந்திரம்... சரிசமானமே எனது மந்திரம்....

Thursday, April 10, 2014

"ஜய' வருடம் 2014


உத்திராயன புண்ணிய காலத்தின் நான்காவது மாதம் சித்திரை. சித்திரைப் பிறப்பை புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

வருடம், மாதம், திதி, நட்சத்திரம், கிழமை, யோகம், கரணம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகள் கணக்கிடப்படுகின்றன. இது முழுக்க முழுக்க வானவியல் அடிப்படையில் அமைந்த கணக்கீடு என்று ஆய்வாளர்கள் சொல்வர்.

சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் கொண்டு நாள் கணக்கிடப்படுகிறது. நாளைக்கொண்டு மாதமும், மாதத்தைக் கொண்டு ஆண்டும் கணக்கிடப்படுகின்றன.

சூரியன் எந்த ராசியில் பிரவேசிக்கிறானோ அந்த ராசிக்கு ஒரு பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

ஒருகாலத்தில் மாதங்களின் பெயர்கள் ராசிகளின் பெயர்களாக இருந்தன. அதில் முதல் ராசியாக மேஷ ராசி இருந்தது. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு சின்னமும், அதற்கொரு குணமும் சொல்லப்பட்டது. மேஷம் என்பது வடமொழிச்சொல். இதற்கு தமிழில் "ஆடு' என்று பொருள். அந்த ஆடுதான் பின்னாளில் ஆண்டு என்று மாறியதென்பது சிலரது கருத்தாகும். இந்த ஆண்டை "ஆட்டை' என்றும் அழைப்பதுண்டு. மலையாட்டுக்கு வருடை என்றும் பெயர். இதிலிருந்துதான் வருடம் என்னும் சொல் பிறந்தது என்றும் சொல்வார்கள்.

சூரியனின் அடிப்படையிலும் சந்திரனின் அடிப்படையிலுமாக புத்தாண்டுகள் கொண்டாடப்படுகின்றன.

சூரியனை வைத்து கொண்டாடப்படும் புத்தாண்டுதான் தெலுங்கு வருடப் பிறப்பு.

அதாவது யுகாதி. இதில் அமாவாசையை கணக்கிட்டு மாதங்கள் கணக்கிடப்படுகின்றன. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உட்பட சில மாநிலங்களில் இந்தப் புத்தாண்டு கொண்டாடப்படுகின்றது.

சந்திரனை வைத்துக் கொண்டாடப்படும் புத்தாண்டுதான் தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் உட்பட பல மாநிலங்களில் கொண்டாடப்படுகின்றது.

சித்திரை மாத முதல் தேதியை வருடப்பிறப் பென்றும்; மேஷ சங்கராந்தி, சித்திரை விஷு என்றும் சொல்வர். விஷு என்றால் இரவும் பகலும் சமமானது. சூரியன், சித்திரை மாதத்தில் முதலாவதாகிய மேஷ ராசியில் உதயமாவதால், சித்திரை வருடப்பிறப்பு விஷு புண்ணிய காலம் எனப்படுகிறது.

சித்திரை முதல் தேதியன்று கோவில்களில் பஞ்சாங்கம் படித்து அந்த வருடத்தின் பலன்களைக் கூறுவர்.

திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் எனும் ஐந்து அங்கங்களை விளக்குவது பஞ்சாங்கம். நன்மையை விருத்தி செய்வது திதி; ஆயுளை வளர்ப்பது வாரம்; பாவத்தைப் போக்குவது நட்சத்திரம்; ரோகத்தைப் போக்குவது யோகம்; வெற்றியைத் தருவது கரணம்.

சித்திரை மாதப்பிறப்பன்று கேரள நாட்டினர் "விஷுகனி காணல்' என்று கொண்டாடுகிறார்கள்.

தமிழகத்தில் சித்திரை மாதப்பிறப்பன்று இறை வழிபாடு செய்து, அறுசுவை உணவும் தயாரிப்பார்கள். அன்றைய உணவில் இனிப்பு மாங்காய் பச்சடியும், வேப்பம்பூ பச்சடி அல்லது ரசமும் இருக்கும். இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை இது உணர்த்துகிறது.

14-4-2014-ல் சித்திரை முதல் தேதி பிறக்கிறது. இந்த வருடத்தின் பெயர் "ஜய' என்பதாகும். இதேபோல் ஒவ்வொரு வருடத்திற்கும் பெயருண்டு. இந்த வருடங்களுக்குப் பெயர் பிறந்தது குறித்து புராணத்தில் தகவல்கள் உள்ளன.

ஒருசமயம் நாரதர், மகாவிஷ்ணுவைக் காண வைகுண்டம் சென்றார். அப்பொழுது மகாவிஷ்ணுவின் கால்களைப் பிடித்துக்கொண்டிருந்த மகாலட்சுமி, நாரதரைக் கண்டதும் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். இதைக் கண்ட நாரதர், ""சுவாமி, நான் வந்ததைக் கண்டதும் தங்கள் தேவி ஏன் உள்ளே செல்லவேண்டும்? நான் மாயையிலிருந்து விடுபட்டவனாயிற்றே'' என்று கேட்டார்.

""நாங்கள் தனிமையில் இருக்கும்போது நீ பிரவேசித்ததால் லட்சுமி துணுக்குற்றாள். காரணம், மாயையை இதுவரை யாரும் வெற்றி கண்டதில்லை'' என்று பகவான் கூறினார்.

பகவானின் முகத்தை சந்தேகத் துடன் பார்த்தார் நாரதர். ""நாரதா, நீ என்ன நினைக்கிறாய் என்பதை நானறிவேன். என்னுடன் வா'' என்று பூலோகத்திற்கு நாரதரை அழைத்துச் சென்றார் மகாவிஷ்ணு.

அங்கு ஒரு தடாகம். அதில் மூழ்கி எழும்படி நாரதரிடம் கூறினார் மகாவிஷ்ணு. நாரதரும் கரையில் தம்புராவை வைத்துவிட்டு, தடாகத்திற்குள் மூழ்கி எழுந்தபோது அழகிய கன்னிப்பெண்ணாக மாறி யிருந்தார்.

மாயையின் சக்தி என்னவென்பதை நாரதர் உணர வேண்டுமென்று, பெண்ணாக மாறிய நாரதரை அங்கேயே விட்டுவிட்டு மறைந்துவிட்டார் பகவான்.

பெண்ணாக மாறிய நாரதர், தன் பூர்வீக நினைவுகளை இழந்தார். "தான் யார்?' என்பதை அறியாமல் தவித்துக்கொண்டிருக்கும் வேளையில், அங்கு வந்தான் காலத்வஜன் என்னும் மன்னன்.

தடாகத்தின் கரையில் நின்றுகொண்டிருக்கும் அழகியைக் கண்டான்; காதல் கொண்டான். அவளைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி கொடுத்து தன் அரண்மனைக்கு அழைத்துச்சென்றான்.

மன்னன் அவளை முறைப்படி திருமணம் செய்துகொண்டான்.

காலம் கடந்தது.

அவர்களுக்கு அறுபது குழந்தைகள் பிறந்தன.

பெண்ணாக மாறிய நாரதர் குழந்தைகளைப் பெற்று வளர்த்து குடும்பம் நடத்துகையில் மாயயையில் கட்டுண்டு கோபம், தாபம், பொறாமை, புகழ், வெற்றி, குரோதம், கருணை போன்ற பல குணங்களுக்கும் உட்பட நேர்ந்தது.

இந்த நிலையில் மன்னன் காலத்வஜனோடு, அண்டை நாட்டு மன்னன் போர்தொடுத்தான். போரில் மன்னனும் அவனது அறுபது பிள்ளைகளும் மாண்டுபோனார்கள்.

இத்துயரத்தினால் வாழ்க்கையே வெறுத்துப் போனதாக உணர்ந்த பெண்ணாக இருந்த நாரதர், ஆரம்பத்தில் எந்தத் தடாகத்தில் பெண் ணாக மாறினாரோ, அங்குவந்து உயிரைவிட தடாகத்தில் வீழ்ந்தார்.

நீரில் விழுந்ததும்- சுயஉருவம் பெற்று நாரத ராகக் காட்சிதந்தார். சுற்றும்முற்றும் பார்த்தார். ஏதோ கனவு கண்டதுபோல் திக்பிரமையில் ஆழ்ந்தபோது, ஸ்ரீமன் நாராயணன் அவருக்குக் காட்சி கொடுத்து, நடந்த சம்பவங்களைக் கூறி, நாரதர் மாயையின் பிடியில் அகப்பட்டிருந்த தன்மையைக் கூறினார்.

நாரதர், அன்று தடாகக்கரையில் வைத்து விட்டுப்போன தம்புராவை எடுத்து மீட்ட ஆரம்பித்தார்.

""நாரதரே, நீ பெண்ணாக இருந்தபோது பிறந்த அறுபது குழந்தைகளின் பெயர்களைக் கொண்டு அறுபது வருடங்கள் விளங்கும்'' என்றருளினார்.

நாரதர் மாயையின் வசப்பட்டிருந்தபோது அவர் கொண்டிருந்த குணங்களைக் குறிப்ப தாகவே வருடங்களின் பெயர்கள் திகழ்கின்றன.

பிரபவ முதல் அட்சய வரையிலுள்ள அறுபது வருடங்களின் பெயர்களும் புகழ், அந்தஸ்து, தூயமனம், கெடுமதி, வெற்றி, குரோதம், ராட்சசம் போன்ற குணங்களைக் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. அந்த வகையில் இந்த வருடம் ஜய வருடம் என்பதால், வெற்றியைத் தரும். நேர்மையுடன்- சுயநலமின்றி மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் களுக்கு எதிலும் வெற்றி கிட்டும் எனப்படுகிறது.

அறிவியல் கூற்றின்படி பூமியைச் சுற்றியுள்ள அண்டப்பெருவெளி ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது. அந்த வட்டம் 360 டிகிரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்று பன்னிரண்டு ராசிகளாக வகுக்கப்பட்டுள்ளன. ஒரு ராசிக்கு 30 டிகிரிகள். சூரியன் ஒரு ராசியில் தங்கியிருக்கும் காலம் ஒரு மாதம். 12 ராசிகளில் சூரியன் நிற்பதற்கேற்ப பெயர்கள் அமைந்துள்ளன. அம்சுமான், தாதா, சபீதா, அரியமான், விஸ்வான், பகன், பர்ஜன்யன், துவஷ்டா, மித்திரன், விஷ்ணு, வருணன், பூஷா என்பவையாகும்.

ஒவ்வொரு ராசியிலும் சூரியன் ஒரு மாதம் தங்கியிருப்பதால், அந்த நேரத்தில் சந்திரன் 12 ராசிகளையும் ஒருமுறை கடந்து வந்துவிடுகிறார்.

ஒவ்வொரு மாதத்திலும் ஒரு பௌர்ணமி, ஒரு அமாவாசை வரும். சூரியனும் சந்திரனும் ஒரே நேர்கோட்டில் அருகருகே வரும்போது, சூரியனுடைய ஒளி சந்திரனை முற்றிலும் மறைக் கிறது. இதுவே அமாவாசை. சில சமயங்களில் ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசைகளும் இரண்டு பௌர்ணமிகளும் வருவதுண்டு. இது அபூர்வமாகும். இந்த சித்திரையில் இரண்டு பௌர்ணமிகள் வருகின்றன.

இந்தப் பன்னிரண்டு ராசிகளிலும் 27 நட்சத்திரங்கள் சமபங்காக இல்லாமல் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என பாதங்களை வகுத்திருக்கிறார்கள் ஜோதிட நிபுணர்கள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு பாதங்கள் உண்டு. அதாவது ஒரு பாதம் என்பது 3.3 டிகிரி. ஒரு நட்சத்திரம் 13.2 டிகிரியாகும்.

இத்தனை நுட்பமாக காலத்தைக் கணித் திருக்கும் நமது முன்னோரை வணங்குவோம்.

நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர் கொள்வோம்.

No comments:

Post a Comment