இந்தியாவிலிருந்து வந்த ஆப்பிள்
அங்கு ஒரு நண்பர்
குறிப்பிட்டுச் சொன்ன மகத்தான இந்திய பாபாவை சந்தித்து ஆன்மீக வாழக்கைக்கு
வழிகேட்டு தீட்சை பெற்வேண்டும் என்பது அந்த இளைஞனுக்கு திரும்ப திரும்ப
தோன்றிக் கொண்டிருந்த எண்ணம். தனக்கு பகுதி நேரவேலை தந்த கம்யூட்டர்
நிறுவனத்திடம் தன் இந்திய பயணத்திற்கு உதவி செய்யும்படி கேட்கிறான். மறுத்த
நிறுவன அதிபர் ஜெர்மனிக்கு போய் ஒரு வேலை செய்வதானால் இந்தியா
அனுப்புவதாகச் சொல்லுகிறார்.
அந்த வாய்ப்பை ஏற்று, ஜெர்மனியில் வேலை செய்துமுடித்துவிட்டு, இந்திய
பயணத்தில் நாட்டமும் ஆன்மீகத்தில் ஆர்வமும் இருந்த உடன் வந்த அமெரிக்க
நண்பருடன் குருவைத்தேடி, தனது 19 வயதில் 1974ம்
ஆண்டு இந்தியா வருகிறான். குருவின் ஆஸ்ரமம் எங்கே இருக்கிறது எனறு
தெரியாமல் பல இடங்களை சுற்றிப் பார்த்தபின் நைனிடால் அருகே உள்ள நீம்கரோலி
பாபாவின் கைநச்சி ஆஸ்ரமத்தை அடைகிறான். அங்கு அவன் அறிந்த அதிர்ந்த
அதிர்ச்சியான விஷயம் அவன் தேடி வந்த பாபா சில வருடங்களுக்கு முன் கடவுளுடன்
கலந்துவிட்டார் என்ற செய்தி.
ஏமாற்றமடைந்தாலும் அந்த சூழ் நிலை பிடித்திருந்ததால் அங்கு சில நாள்
பாபாவுடன் வாழ்ந்த துறவிகளுடன் தங்கி பலரிடன் பேசுகிறான். அந்த கால
கட்டத்தில் ஆன்மீக தேடல் என்ற பெயரில் ஹிப்பிக்களின் புதிய கலாசாரம் பரவிக்
கொண்டிருந்த்த்து. அழுக்கான உடை, சீராக இல்லாத நீண்டமுடி, கிடைப்பதை
சாப்பிடுவது, போதைப் பொருட்கள் என்று உலகின் பல இடங்களுக்கு அலைந்து
கொண்டிருந்த இவர்களில் பலர் இந்தியாவிற்கு வந்து ஏதாவது ஒரு மடத்தில்
சாமியார்களுடன் வாழ்வதும் பின்னர் தீட்சை பெற்று திரும்புவதும் நடந்து
கொண்டிருந்தது. பல இடங்களில் இவர்களை ஏமாற்றி நம் ஆட்கள் பணம் பறிப்பதும்
நடந்து கொண்டிருந்தது.
தானும் தன் நண்பரும் அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றும், உண்மையில்
பாபாவை தேடி வந்ததையும், ஆன்மிக வாழக்கைக்காக அவரின் ஆசி வேண்டி வந்ததையும்
ஆஸ்ரம வாழ்க்கையின் போது நெருக்கமான ஒரு துறவியிடம் பேசுகிறான். தந்தை
யாரென்று சொல்லப்படாமல் தாயால் தத்து கொடுக்கபட்டதையும், அன்பாக வளர்த்த
அவர்களின் ஆசைக்காக கல்லூரி போனதையும், படிக்க முடியாமல் போனதையும், தனக்கு
சாதாரண மனித வாழக்கை பிடிக்காமல்தான் அங்கு வந்திருப்பதையும்
சொல்லுகிறான்.
பொறுமையாகக் கேட்ட அந்தத் துறவி மறு
நாள் சந்திக்கச் சொல்லுகிறார். மறுநாள் காலையில் “ ஆண்டவனின் சித்தப்படி நீ
முடிக்க வேண்டிய பெரிய பணிகள் இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ
ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு
ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார். அந்த ஆஸ்ரமத்தில் பாபா இருக்கும்போது பார்க்க
வருபவர்களுக்கு அவர் தருவது ஆப்பிள் தான். ஏமாற்றமடைந்த அந்த 1974ல்
இளைஞன் அமெரிக்கா திரும்புகிறான்.
அந்த இளைஞன் தான் பின்னாளில் கணினித் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த
ஸ்டீவ் ஜாப்ஸ் (1955-2011). தமது முதல் கனவான புதிய வகையிலான
கணினியை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல், இசை, தொலைபேசி, கணினி என்று மூன்று
தொழில்நுட்பங்களையும் கையடக்க அளவில் உலகெங்கும் கொண்டு சென்ற ஐபாட்,
ஐபோன், ஐபேட் ஆகியவற்றையும் வடிவமைத்தது அவர் உருவாக்கி வழிநடத்திய
நிறுவனம்.
அந்த நிறுவனத்தின் பெயர் ஆப்பிள். “இந்தியாவிற்கு
ஸ்டீவ் செய்த ஆன்மீகப் பயணம் அவர் ஆப்பிளை துவங்க ஊக்கமளித்த முக்கிய
காரணம்” என்கிறார் அவரது வாழக்கை சரிதத்தை அவர் அனுமதியுடன் எழுதிக்
கொண்டிருக்கும் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வால்ட்டர் ஐசக்சன்.
புத்தகம் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கிற்து.
2011 அக்டோபர் 5ம்
தேதி, இவர் மரணமடைந்த போது, உலகின் அத்தனை பெரிய தினசரிகளும் முதல்
பக்கத்தில் தலைப்பு செய்தியாக இவரது மரணச்செய்தியை வெளியிட்டு, தலையங்கள்
எழுதி கெளரவித்திருந்தன. பல நாட்டு தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர்
அஞ்சலி செய்தி அனுப்பியிருந்தனர். கைநச்சி மடத்தின் நிர்வாகி ஜோஷியும்
அதில் அடக்கம். பாபவை தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்தபோது
மடத்திலிருந்தவர் இவர்.
1974ல் இந்தியாவில் இருந்து மொட்டைத் தலையும்
காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த
மதங்களின் ஆழமான தாக்கம் இருந்தது. இது அவரது பல செயல்களில் தெரிந்தது.
உலகின் முதல் 10 பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இவர்
வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு
மட்டுமே. படித்த புத்தகங்களில் பெரும்பாலானவை இந்து,பௌத்த ஞானம்
தொடர்பானவை.
கடந்த 7 ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடி தோற்றவரின் இறுதி நாட்கள்
பற்றி வரும் செய்திகள் மனதைத் தொடுகின்றன. குடுமப்த்தினருடன் கழித்த அந்த
நாட்களில் வீட்டின் பிராத்தனை அறையில் நீண்ட நேரம் செலவிட்டிருக்கிறார்.
பொதுவாக அமெரிக்கர்கள் வீட்டில் பிராத்தனை அறையிருக்காது. இவரது பிராத்தனை
அறையில் கிருஷ்ணர் போன்ற இந்து கடவுள்களின் படங்கள் இருப்பதாக
சொல்லப்படுகிறது.
ஸ்டீவ் ஜாப்ஸின் மரண இரங்கல் செய்தியில், “மாற்றி யோசிப்பதற்கான
தைரியத்தையும் அதை செயல்படுத்தும் துணிவையும், உலகை மாற்ற் முடியும் என்ற
தன்னம்பிக்கையையும், சாதிக்கும் திறமையையும் ஒருங்கே கொண்ட மிகப்பெரிய
அமெரிக்க சாதனையாளர்” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த அமெரிக்கருக்கு அதை சாதிக்க இந்த இந்திய மண்ணும், இங்கு பிறந்த
இந்து,பௌத்த மத தத்துவங்களும் உதவியிருக்கின்றன.
No comments:
Post a Comment