இமயத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து, தென்பாண்டி நாட்டில் பொதிய மலையை இருப்பிடமாகக் கொண்டு அற்புதங்கள் பல நிகழ்த்தியவர் அகஸ்தியர் என்று வரலாறும் கற்பனையும் கலந்த பல கதைகள் நம் நாட்டில் வழங்கி வருகின்றன. பார்வதியும் பரமசிவனும் திருமணம் செய்து கொண்டனர், அதைக் காண தென்னாட்டிலிருந்து பெருந்திரளாக மக்கள் கைலாசத்தில் கூடினர். அதனால் பூமி ஒரு பக்கம் தாழ்ந்து, நிலை தடுமாற, சிவபெருமான் அகஸ்திய முனிவரைத் தென்னாட்டுக்கு அனுப்பினார். அகஸ்தியர் தமிழைக் கற்று, அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை எழுதினார். பாண்டியனது வேண்டுகோளை ஏற்று, தமிழ்ச் சங்கத்தை நிறுவினார். மொழி ஆராய்ச்சியோடு, பல மருத்துவ நூல்களும் எழுதினார். இவையெல்லாம் தமிழோடு சம்பந்தப்பட்டவை.
சமஸ்கிருத நூல்களைப் படித்தால், அகஸ்தியர் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர். சில ரிக் வேதப் பாடல்களின் கவி. அவரது பிறப்பும் ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் கும்ப முனி, குடத்திலிருந்து ஜனித்தவர். மித்ர-வருண எனற தேவனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர்.
இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற கோபத்தால் கால கேயர்கள் கடலில் ஒளிந்து கொண்டு, அவ்வப்போது வெளியே வந்து தேவர்களைத் துன்புறுத்தினர். இந்திரனின் வேண்டுகோளின்படி அகஸ்தியர் கடலைத் தன் உள்ளங்கையில் ஏந்திக் குடித்தார்.
வாதாபி, இல்வலன் என்ற இரண்டு அரக்க சகோதரர்கள். வழிப்போக்கர்களை விருந்துக்கழைத்து, இல்வலன் ஆட்டுருவில் இருக்கும் வாதாபியைக் கறி சமைத்துப் படைப்பான். விருந்தினர் உண்டு முடிந்ததும், 'வாதாபி, வெளியே வா', என்றழைப்பான். விருந்தினர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வாதாபி வெளியே வருவான். ஒரு சமயம் இல்வலன் அகஸ்தியருக்கு உணவு இட்டபின் வழக்கம் போல் வாதாபியை அழைக்க, அவன் ஜீரணமாகி விட்டான் என்று கூறி, அகஸ்தியர் அவர்களது கொடுமையை ஒழித்தார்.
அகந்தையால் வானளவு உயர்ந்து சூரிய சந்திரர்களின் போக்கைத் தடுக்க முற்பட்ட விந்தியமலை தன்னைப் பணிந்த போது, 'நான் தென் திசை சென்று திரும்பி வரும்வரை அப்படியே தாழ்ந்திரு' என்று சொல்லிச் சென்றவர் திரும்பி வடநாடு செல்லவேயில்லை. இந்திரன் விருத்திராசுரனைக் கொன்ற தோஷத்தால் பீடிக்கப்பட்டு மானசரோவரத்தில் ஒரு தாமரைத் தண்டில் ஒளிந்து வாழலானான். இந்திரன் இல்லாதிருந்தது தேவலோகம். அப்போது நூறு அசுவ மேத யாகங்களைச் செய்து முடித்த நகுஷ சக்கரவர்த்தி புதிய இந்திரனானான். பதவிச் செருக்கில் அவன் இந்திராணியையும் விரும்பினான். அவனிடமிருந்து தப்புவதற்காக, தேவகுரு பிரகஸ்பதி சொன்னபடி, மகரிஷிகள் சுமக்கப் பல்லக்கில் வந்தால் அவனை ஏற்பதாக இந்திராணி நிபந்தனை விதித்தாள். நகுஷன் அகஸ்தியர் உட்பட்ட ரிஷிகளைப் பல்லக்கைச் சுமக்கச் செய்தான். இந்திராணியின் மேல் கொண்ட காமத்தால் அறிவிழந்த அவன் ரிஷிகளை 'சர்ப்ப, சர்ப்ப'[வேகமாகச் செல்லுங்கள்] என்று விரட்டினான். அதனால் கோபமடைந்த அகத்தியர், 'சர்ப்ப சர்ப்ப' எனறு எங்களை விரட்டிய நீ மகாசர்ப்பமாகக் கடவாய்' என்று சபித்தார். உடனே நகுஷனும் பெரும் மலைப்பாம்பாக உருமாறி பூமியில் விழுந்தான்.
அகஸ்தியர் லோபமுத்திரையை மணந்தார். கிரௌஞ்சன் என்ற அசுரன் தன்னைத் துன்புறுத்த, அவனை மலையாகும்படி சபித்தார். முருகனின் வேல்பட்டு அவன் தன்னுருவை மீண்டும் பெறுவான் என்று அருளினார். அகஸ்தியர் ராம ராவண யுத்தத்தில், ராமன் உள்ளத் தளர்வெய்திய போது, சூரியனைப் போற்றும் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசித்தார். அகஸ்தியரே தமிழ்நாட்டுக்குக் காவிரியையும், தாமிரவருணியையும் தனது கமண்டலத்தில் கொண்டு வந்தார். தொல்காப்பியர் அவரது சீடர். தென் திசை வானில் காணப்படும் ஒளி மிகுந்த அகஸ்திய நட்சத்திரம் (கெனோபஸ்) அவரே. 'அகஸ்திய கூட மலை'யில் அவர் இன்றும் தவமியற்றிக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம். இப்படி அகஸ்தியரைப் பற்றி எண்ணற்ற கதைகள் உண்டு.
அகஸ்தியருக்கு பாரதத்தில் பல இடங்களில் ஆசிரமங்கள் இருந்ததாகத் தெரிகிறது. தண்டகாரணியத்தின் வடபகுதியில் மகாராஷ்டிரத்தில் நாசிக் -பஞ்சவடியில் ஆசிரமம் இருந்தது. அங்கேதான் அவர் ராமனை முதலில் கண்டார். லோபமுத்திரையை மணந்ததும் அங்கு தான். (குஜராத்திலுள்ள சோமநாத் பிரபாஸ்பட்டணத்தில் அவர்களது திருமணம் நடந்தது என்றும் ஒரு கதை உண்டு). அவரது இரண்டாவது ஆசிரமம் வட கர்நாடகத்தில் வாதாபிக்கு மூன்று மைல் கிழக்கிலுள்ள 'மலகூட பர்வத'த்தில் இருந்தது.. மூன்றாவது ஆசிரமம் 'மலய பர்வதம்' எனப்படும் பொதியில் அல்லது பொதிகையில் இருந்தது. வால்மீகியும் கம்பனும் அதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அகஸ்திய வழிபாடு இருந்தது. பல தமிழகக் கோயில்களில் அகஸ்தியருடைய சிலைகளைப் பார்க்கிறோம். ஆனால் தூரக் கிழக்கு நாடுகளில் உள்ள இந்துக் கோவில்களிலும் அகஸ்தியருக்குச் சிலை வைத்தார்கள் என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. அகஸ்தியரோ அல்லது அவரது சந்ததியினரோ ஜாவா, சுமத்ரா, மலேயா, போர்னியோ, தாய்லாந்து, கம்போடியா நாடுகளுக்குச் சென்று அங்கே ஹிந்து தர்மத்தையும் கலாசாரத்தையும் நிலைநாட்டி இருக்கலாம். யசோவர்மன் என்ற புகழ்பெற்ற கம்புஜ மன்னன் அகஸ்தியருடைய சந்ததியைச் சேர்ந்தவன் என்று சொல்லப்படுகிறது.
கீழ்திசை நாடுகளுக்குச் செல்லும்போது, நான் தவறாது அங்குள்ள இந்தியக் கலாசாரச் சின்னங்களைப் பார்ப்பதுண்டு. அப்படியே இந்தோனேஷியாவிலும் குறிப்பாக ஜாவாவிலுள்ள பல ஹிந்து பௌத்த ஆலயங்களுக்குச் சென்றிருக்கிறேன். அங்கே பல இடங்களில் அகஸ்தியர் சிலைகளைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். தலைநகரான ஜகார்த்தா தொல்பொருள் அருங்காட்சியகத்திலும் பல ஹிந்து தெய்வச் சிற்பங்களோடு அகஸ்தியர் சிற்பங்களைப் பார்த்திருக்கிறேன். இந்தோனேஷியாவிலுள்ள மிகப்பெரிய பழைய சிவாலயம் 'பிரம்பனம்' என்ற ஊரில் இன்றும் உள்ளது. 'ஜோக்ஜகார்த்தா' என்ற நகருக்குச் சற்றுத் தொலைவிலமைந்த அக்கோயிலில் சிவன், பிரம்மா, விஷ்னு, துர்க்கை, கணபதி, நந்தி, அகஸ்தியர் சிலைகள் உள்ளன. சிவாலயத்தை வலம் வரும்போது தெற்குப் பக்கத்தில் அகஸ்தியருக்கு ஒரு தனி சன்னிதியே இருப்பதைக் காணலாம். அகஸ்தியர் சிற்பம் ஜடா மகுடம், தாடி, கைகளில் கமண்டலம், அக்ஷமாலா, குள்ளமான உருவம், பருத்தி இடையோடு காணப்படுகிறது. சிவபெருமானிடத்தில் அவருக்கிருந்த பக்தியினால், அவரை சிவனாகவே நினைத்து, அவருக்கு 'திரிசூலம்' ஒன்றும் அளிக்கப்பட்டிருக்கிறது.
அகஸ்தியரது இந்த இந்தோனேஷியத் தொடர்பைப் பற்றி, தொல்பொருள் துறை துணை இயக்குனர் ஜெனராலாக இருந்த பத்மபூஷண் டி.என். ராமச்சந்திரன் விரிவாக எழுதியுள்ளார். கிழக்கிந்தியத் தீவுகளுக்குக் கடல்வழியாக இந்தியர்கள் சுமார் கி. பி 600 முதல் செல்லத் தொடங்கினர். கூர்ஜர தேசத்திலிருந்து ஓர் இளவரசன் ஆயிரக்கணக்கான தன் குடிமக்களோடு ஜாவாத் தீவில் வந்து குடியேறியதாக ஒரு வரலாறு. பின்னால் கலிங்கத்திலிருந்தும், கோதாவரி, தமிழ்த் துறைமுகங்களிலிருந்தும் கப்பலேறி இந்தோனேஷியத் தீவுகளுக்குப் பல கூட்டங்கள் சென்றன.
ஜாவாவில் கலிங்கம் என்றே ஒரு ராஜ்யம் இருந்தது. அந்நாட்டு மொழியில் 'ஓராங் கெலிங்'(கலிங்க) என்றால் 'இந்தியாவிலிருந்து நேராக வந்தவன்' என்று பொருளாம். அங்கிருக்கும் கல்வெட்டுகளெல்லாம் சாலிவாகன சகாப்த காலக் கணக்கு முறையில் உள்ளன. இக் கணக்கு முறை முற்றிலும் தென்னிந்தியாவில் பின்பற்றிய முறை. அதுமட்டுமல்ல, வட இந்திய காலக் கணக்கு முறையான விக்கிரம சகாப்தம் ஒரு கல்வெட்டிலும் காணப்படவில்லை. எனவே இந்தோனேஷியாவில் குடியேறியவர்கள் பெரும்பாலும் தென்னிந்தியரே. மேலும், பல இடங்களில் பல்லவ லிபிகளே காணப்படுகின்றன.
அக்காலத்தில் பாய்மரக் கப்பலில் சென்ற மாலுமிகளுக்குப் புயலும், சூறாவளியும், கடல் கொந்தளிப்புகளும்தான் பேரபாயங்கள். கடலைக் குடித்த அகஸ்தியர் பெயரைச் சொன்னால் கடல் அலைகளே அடங்கிவிடும் என்று மாலுமிகளுக்கு ஒரு தீவிர நம்பிக்கை. மகா கவி காளிதாசனே 'அகஸ்திய (நட்சத்திர) உதயத்தில் கடல் அமைதியாகிறது' என்று பாடுகிறான். அகஸ்தியர் பெயரும் வழிபாடும் இந்தோனேஷியாவில் பரவுவதற்கு இந்தத் தென்னிந்திய மாலுமிகளும் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார்கள்.
இந்தோனேஷியாவில் உள்ள மூன்று கல்வெட்டுக்கள் குறிப்பாக அகஸ்தியரோடு தொடர்புடையன என்று ராமச்சந்திரன் சுட்டிக் காட்டுகிறார். தென் கேதுப் பிரதேசத்தில் 'சங்கல்' என்ற இடத்தில் சகா 654 (கி. பி.732)ல் எழுப்பிய சமஸ்கிருதக் கல்வெட்டில் உள்ள வாசகம் பின் வருமாறு: "மிக அற்புதமான, தெய்வீகமான சம்பு(சிவன்)வின் ஆலயம் குஞ்சரகுஞ்சம் எனப்படும் வளமிக்க நாட்டில் வசித்த குடும்பம் அல்லது வம்சத்திலிருந்து லோக க்ஷேமத்திற்காகக் கொண்டு வரப்பட்டது (அதைப் போல இங்கு அமைக்கப்பட்டுள்ளது)"
இந்தக் குஞ்சரகுஞ்சம் என்பது குஞ்சரகோணம். அது கன்னடத்தில் ஆனைகொண்டி எனப்படும் விஜயநகர சாம்ராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட இடம், முதல் தலைநகரம். துங்கபத்ராவின் கரையிலமைந்தது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் ஹரிவம்சத்திலுள்ள சிறந்த ஆதாரங்களைக் கொண்டு ஓ.சி. கங்குலி, அகஸ்தியர் வசித்த பல இடங்களில் ஆனைகொண்டியில் உள்ள குஞ்சரகிரியும் ஒன்று என்று முடிவு செய்திருக்கிறார். அங்கே ஒரு கோவிலைக் கட்டியிருக்கக் கூடும். அதை முன்மாதிரியாகக் கொண்டே இந்தோனேஷியக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ஆலயம் கட்டப்பட்டிருக்க வேண்டும். அகஸ்தியரோ அவரது வழிவந்தவர்களோ ஒரு சிவாலயத்தோடு தொடர்புடையவர்கள் என்று இக்கல்வெட்டிலிருந்து தெரியவருகிறது.
ஆனால் மிகத் தெளிவாக அகஸ்தியரே ஒரு சிவாலயத்தைக் கட்டினாரென்று மற்றொரு கல்வெட்டு பேசுகிறது: "பத்ரலோகம் எனப்படும் தேவாலயத்தைக் கலசஜர் (கலசம் அல்லது கும்பத்திலிருந்து ஜனித்தவர் அதாவது அகஸ்தியர்) கட்டினார். அவரது புத்திர பௌத்திரர்களது (சந்ததியினர்) விருப்பங்களெல்லாம் நிறைவேறட்டும்."
இதைவிட முக்கியமான செய்தி மற்றொரு கல்வெட்டினின்றும் கிடைக்கிறது. அது அகஸ்தியருக்கே ஒரு சிலையெடுக்கப் பட்டதைப் பற்றிப் பேசுகிறது. அது வரை சந்தன மரத்தால் சிலைகள் செய்யப்பட்டு வந்தன. அப்படி விரைவில் அழியும் மரத்தாலன்றி, கல்லால் சிலை செய்த விவரங்களை அக்கல்வெட்டு தருகிறது.
"தன் முன்னோர்களால் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட சிலை சேதமாகி பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்ட மன்னன் கருங்கல்லால் அகஸ்தியருக்கு அழகிய சிலையெடுக்கச் சிறந்த சிற்பிகளுக்கு ஆணையிட்டான். சாலி வாகன சாகப்தம் 682ல் (கி.பி.760) மார்கழி மாதம், வெள்ளிக் கிழமை கும்ப லக்னத்தில் வேதம் நன்கறிந்த சான்றோர்களையும், தேர்ந்த சிற்பிகளையும் கொண்டு மன்னன் கும்பமுனிக்குச் சிலையெடுத்து பிரதிஷ்டை செய்தான்." அந்த மன்னனின் பெயர் கஜாயனன்.
இந்தோனேஷியத் தீவுகளில் தெய்வங்களோடு அகஸ்தியரும் வழிபடப்பட்டார். சிவகுரு, பட்டார குரு என்று அவர் அழைக்கப்பட்டார். பிரமாணப் பத்திரங்களில் அகஸ்தியர் பெயர் இருந்தது. மக்கள் அகஸ்தியர் என்ற சமஸ்கிருதப் பெயரிலோ அல்லது 'வலைங்' (பாலினேஷிய மொழியில் அகஸ்திய நட்சத்திரம்) என்ற பெயரிலோ வாக்குறுதி அளிக்கும் வழக்கம் நிலவி வந்தது. அகஸ்தியர் இந்திய சமயம், கலாச்சாரத்தைப் பரப்பியவர் என்பது மட்டுமல்ல, ஜாவாவின் மிகச் சிறந்த கலைகளின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் அவரே காரணமாயிருந்தார்.
வடநாட்டையும் தென்னாட்டையும் இணைத்தவர், இந்தியாவுக்கு வெளியிலும் நமது நாகரீகத்தைக் கொண்டு சென்று பரப்பியவர் என்ற ஆதாரபூர்வமான இந்த உண்மைகள் செயற்கரிய செய்த அகஸ்தியர் என்ற மாபெரும் மனிதரை நமக்குக் காட்டி, இந்தியனாக இருப்பதில் நம்மை பெருமிதமடையச் செய்கின்றன.

No comments:
Post a Comment