உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!
ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.
ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி (single photon emission computed tomography). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.
தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.
அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்
பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.
1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)
2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி உடையவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் – நம்மாழ்வார்)
3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)
4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால்
அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)
5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. (தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)
கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.
மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!
இந்த அறிவியல் தரும் அற்புத ஆராய்ச்சியின் முடிவை நமது அருளாளர்கள் மிகத் தெளிவாக சில வார்த்தைகளிலேயே சொல்லியிருப்பது நம்மை பிரமிக்க வைக்கும் இன்னொரு விஷயம்;
நினைப்பவர் மனங் கோயிலாக் கொண்டவன் (அப்பர் –பனைக்கை என்று தொடங்கும் பாடலில்)
மனத்துள் நின்ற கருத்தானை – (அப்பர் வாயானை என்று தொடங்கும் பாடலில்)
உளன் கண்டாய் நன்னெஞ்சே! உத்தமன் என்றும்
உளன் கண்டாய்; உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் –(பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியில்)
என்ற வார்த்தைகளின் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.